இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தின் தடுப்பு நடவடிக்கையாக இரண்டாம் கட்ட ஊரடங்கு வரும் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசு அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் பொழுது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என கூறியுள்ள நிலையில், உலகம் முழுவதும் முகக் கவசம் தட்டுப்பாடு மற்றும் விலை ஏற்றம் வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட மகளிர் திட்டம் மற்றும் ஸ்கில் இந்தியா திட்டத்தின் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை நடத்தி வரும் சாய்ராம் அறக்கட்டளை மாவட்டத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களை இணைத்து முகக் கவசம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கில் மகளிர் குழுக்களின் வீடுகளுக்குச் சென்று மூலப் பொருட்கள் கொடுத்து முகக் கவசம் தயார் செய்து மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.