விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் நீதி மையம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் மணிமாறன், சாத்தூர் வேட்பாளர் பாரதி இருவரையும் ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மைச் செயலாளரும் திரைப்பட நடிகையுமான ராதிகா சரத்குமார் திறந்த வேனில் பரப்புரை செய்தார்.
அப்போது பேசிய ராதிகா, "50 ஆண்டுகாலம் ஆட்சி செய்த இரண்டு திராவிடக் கட்சிகளும் தேர்தலுக்கு பணம் கொடுத்து மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றிவிட்டனர். இந்தத் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கும்போது சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வைத்துள்ள கடனை எப்படி திரும்ப அடைக்கப் போகிறோம் என யாரும் சொல்லவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என சொல்வார்களா?
எங்களுக்கு லஞ்சம் ஊழல் என எதுவும் தெரியாது. தமிழ்நாடு அமைச்சர்கள் லஞ்சம் பெறவில்லை, ஊழல் செய்யவில்லை எனக் கூற முடியுமா? நாங்கள் உழைத்து முன்னுக்கு வந்தவர்கள். கமல் தலைமையில் உள்ள முதல் கூட்டணி உங்களுக்கு வித்தியாசமான, புதுமையான, உண்மையான ஆட்சியை அளிக்கும். 2011ஆம் ஆண்டில் திமுக அறிவித்த இரண்டு ஏக்கர் நிலம், செல்போன் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை. எங்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் எந்தத் திட்டங்களை செய்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும் என சிந்தித்துள்ளோம். காமராஜர் ஆட்சி மறுபடியும் வரவேண்டும். அவரது ஆட்சிக்குப் பிறகு தமிழ்நாட்டில் எந்த ஒரு அணையும் கட்டப்படவில்லை. இதனால் தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்னை அதிகமாக உள்ளது.
அரசு வாஷிங்மெஷினை இலவசமாகத் தருமா? அதிமுகவும் திமுகவும் மாறி மாறி ’நீ திருடன், நான் திருடன்’ என சண்டைபோட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் இரண்டு ரூபாய்க்கு முகக்கவசம் விற்பனை செய்து வருகிறார்கள். முகக்கவசத்தைக்கூட இலவசமாகத் தர முடியாத இந்த அரசு, எப்படி இலவசமாக வாஷிங் மெஷின் தரும்? மக்கள் பொய்யான வாக்குறுதிகளை நம்பவேண்டாம்" எனக் கூறினார்.