தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொன்னமராவதி விவகாரம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியல்! - விருதுநகர்

விருதுநகர்: பொன்னமராவதியில் குறிப்பிட்ட சமுதாயம் குறித்து வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியான சம்பவத்தை கண்டித்து விருதுநகரில் நான்கு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ponamaravathi issue

By

Published : Apr 23, 2019, 10:22 PM IST

பொன்னமராவதியில் குறிப்பிட்ட ஒரு சமுதாயம் குறித்து இழிவாகப் பேசி வாட்ஸ்அப்பில் ஆடியோ வெளியான சம்பவத்தை கண்டித்து அந்த ஆடியோவில் பேசிய இருவரை கைது செய்யக்கோரி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில் அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், திருச்சுழி அருகே மினாக்குளம், மீட்டாங்குளம், நம்பியேந்தல் மற்றும் கிளவிகுளம் ஆகிய நான்கு கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அருப்புக்கோட்டை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் பெண்கள் கையில் துடைப்பத்தை ஏந்தியவாறு தங்கள் சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய இருவரை கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு கோஷம் எழுப்பினர்.

சாலை மறியல் சம்பவம் தொடர்பான தகவல் அறிந்து விரைந்து வந்த திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் சசிதரன் தலைமையிலான காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையின்போது சம்பவம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பொன்னமராவதி விவகாரம்

ABOUT THE AUTHOR

...view details