விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நத்தத்துப்பட்டியில் வசித்துவருபவர் பழனி. இவரது மகன் மாரிமுத்துவிற்கு (30) இரண்டு பெண்களுடன் திருமணம் நடந்தது. ஆனால் இவரது செயலால் இரண்டு மனைவிகளும், வாழப்பிடிக்காமல் பிரிந்து சென்றுவிட்டனர்.
இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல், மாரிமுத்து வீட்டில் தினமும் தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் மாரிமுத்து கையில் இரும்பு கம்பியுடன் அம்மாவிடம் தொடர்ந்து தகராறு செய்துவந்துள்ளார். இதைப்பார்த்த மாரிமுத்து வீடு அருகே வசித்துவந்த உறவினர் சமுத்திர பாண்டி (54), தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து தனது கையில் வைத்திருந்த கம்பியால் சமுத்திர பாண்டியை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிறகு இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற இருக்கன்குடி காவல் துறையினர், சமுத்திர பாண்டியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வீடு மாடியில் பதுங்கியிருந்த கொலையாளி மாரிமுத்துவை பிடிக்க காவல்துறையினர் சென்றனர். அப்போது அவர் அருகில் வந்தால் தான் வைத்திருந்த கம்பியால் தாக்கி விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இருப்பினும் காவல் துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், சமுத்திரபாண்டி அடிக்கடி கேலி செய்ததாகவும், அதனால் தான் அவரைக் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் இவரைப்போல், தன்னை கேலிசெய்த என்று அழைத்த மற்ற ஒருவரையும் கொலைசெய்ய வேண்டும் என்று மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காவல் துறையினர் கொலையாளி மாரிமுத்துவை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.