அத்துமீறலுக்குள்ளாகும் நீர் தொட்டி: அன்று புதுக்கோட்டை.. இன்று விருதுநகர்... கைப்பற்றப்பட்ட நாயின் சடலம்! விருதுநகர்:சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் கூடுதலாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு, அதன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வழக்கமாக மாதத்தில் 5 மற்றும் 20-ம் தேதிகளில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை சுத்தம் செய்வது வழக்கம். நேற்று சுத்தம் செய்யப்படாத நிலையில் இன்று சுத்தம் செய்வதற்காக பணியாளர் மேலே சென்றபோது உள்ளே நாயின் சடலம் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்வதற்காக கடந்த 2 தினங்களாக தண்ணீர் நிரப்பப்படாமல் இருந்தது.
இதனால் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்ததால் யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் நாயின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தில் சிவகாசி டிஎஸ்பி தனஞ்ஜெயன், வட்டாட்சியர் லோகநாதன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் உயிரிழப்பு: நிவாரணம், வீடு வழங்க முதலமைச்சர் உத்தரவு