தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுரை எய்ம்ஸூக்கு ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு: ஆர்டிஐ தகவல் - மதுரை எய்ம்ஸூக்கு ரூ12 கோடி ஒதுக்கீடு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு இதுவரை ரூ.12.35 கோடியை மட்டுமே ஒதுக்கியிருப்பது, ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.

மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ்

By

Published : Feb 27, 2023, 5:10 PM IST

மதுரை: நாடு முழுவதும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் வகையில், பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாட்டில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால், 4 ஆண்டுகளைக் கடந்தும் கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், தற்போதைக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து வருகின்றனர்.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ரவி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம், நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சம் அளித்துள்ள தகவலில், அசாம் மாநிலம் கவுகாத்தி, குஜராத் மாநிலம் ராஜ்கோட், மதுரை உள்ளிட்ட 7 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. ரூ.1,977.8 கோடி மதிப்பில் கட்டப்படும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, ரூ.12.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விருதுநகர் மக்களவை தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறுகையில், 'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்திய அரசு ரூ.12 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது மத்திய அரசு மற்றும் பாஜக தலைவர்களின் பொய்களை தோலுரித்து காட்டுகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்த பணியும் நடக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவல், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிறது என்பதற்கான சரியான எடுத்துக்காட்டு’ எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: TNPSC Group 2: குரூப்-2 குளறுபடி; டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் அவசர ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details