விருதுநகர்:சிவகாசியைச் சேர்ந்த ராஜ் என்பவருக்குச் சொந்தமான கிருஷ்ணசாமி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், இருவர் படுகாயமடைந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே துரைச்சாமிபுரத்தில் கிருஷ்ணசாமி பட்டாசு தொழிற்சாலை நாக்பூர் உரிமம்பெற்று செயல்பட்டுவருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவருகின்றனர். இங்கு ஃபேன்சி ரக பட்டாசு வெடிகள் தயாரிக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் இன்று காலையில் சில பணியாளர்கள் வேலைசெய்ய தொடங்கியபோது உராய்வினால் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு, மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் பட்டாசு வெடி விபத்து குறித்து மாரனேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.