விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. நன்கு கதிர் விடும் நிலையில் உள்ள இந்த பயிர்களை அமெரிக்கப் படை புழுக்கள் தாக்கி சேதப்படுத்தி வருகின்றன. எனவே மக்காச்சோள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், “விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 27 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பருவமழை பொய்த்துப் போனதால் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் விளைந்த மக்காச்சோள பயிர்கள் அமெரிக்க படை புழுக்களினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவரும் ஏழை நடுத்தர விவசாயிகள் அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
அதேபோல் மதுரை மாவட்டத்திலும், குறிப்பாக திருமங்கலம், கள்ளிக்குடி, தே கல்லுப்பட்டி, பேரையூர், திருப்பரங்குன்றம் ஆகிய வட்டாரங்களிலும் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம்வரை போதிய மழை பெய்யாததால் பயிர்கள் கருகும் அபாயம் இருந்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து அந்த மக்காச்சோள பயிர்களுக்கு புத்துயிர் வந்து நன்கு வளர்ந்து கதிர்கள் முளைத்தன. அறுவடைக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் அந்த மக்காச்சோள கதிர்களை அமெரிக்கா படை புழுக்கள் தாக்கி வருகின்றன.
மதுரையில் தே கல்லுப்பட்டி, பேரையூர், உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஆகிய வட்டாரங்களில் படை புழுக்களின் தாக்குதல் அதிகரித்துள்ளது. நன்கு வளர்ந்த கதிர்களில் 40 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மக்காச்சோளம் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் ஏக்கருக்கு சுமார் 20000 ரூபாய்வரை செலவு செய்த விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். எனவே மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.