விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் அக்கம்மாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் நல்லாலு. இவர் கொத்தனார் வேலை பார்த்துவருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகள் கலாராணி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலையில் இருந்து கலாராணியை காணவில்லை என்பதால், சந்தேகமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். கலாராணியின் தம்பி சந்தேகமடைந்து வீட்டின் அருகே உள்ள மூடப்படாத கிணற்றில் பார்க்கும்போது கலாராணி சடலமாக மிதந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கலாராணியின் தம்பி வீட்டிற்கு வந்து தகவல் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கலாராணியின் பெற்றோர் கிணற்றில் மிதந்த கலாராணியின் உடலை பார்த்து கதறி அழுதனர். சம்பவம் குறித்து காவல் துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்துவந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கலாராணியின் உடலை மீட்டனர்.
பின்னர் கலாராணியின் உடலை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அவசர ஊர்தியில் அனுப்பிவைத்தனர். காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் கலாராணி நேற்று தன் ஆண் தோழருடன் வெகு நேரமாக பேசியுள்ளார், இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து கலாராணியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
கல்லூரி மாணவி கிணற்றில் சடலமாக மீட்பு அதனைத் தொடர்ந்து கலாராணியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த கலாராணி தன் வீட்டின் அருகே உள்ள மூடப்படாத கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்துள்ளது. மேலும் கலாராணி தற்கொலை செய்து கொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் அருப்புக்கோட்டை நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.