விருதுநகர்:உயிரைப் பணயம் வைத்து பணி செய்கின்ற மருத்துவர்களையும், செவிலியர்களையும் நாம் உற்சாகப்படுத்த வேண்டும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அருப்புக்கோட்டை பகுதியில், கரோனா பரவுதல் குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது; 'விருதுநகரில் நாளை(மே 16) முதல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளில் வாசலில் அடையாள நோட்டீஸ் ஒட்டப்படும். இதனால் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தேவையின்றி வெளியே சுற்றும் நிலை மாறும், தொற்று பரவுதல் கட்டுப்படுத்தப்படும்.
இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் உயிர் போகும் அபாயம் இல்லை எனத் தெரியவந்துள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்துவதைப் பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.