விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் கிராமத்தில் மூன்று பால் உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கங்களின் மூலம் நாள்தோறும் சுமார் 800 லிட்டர் பால் உற்பத்தியாகிறது. இவ்வாறு உற்பத்தி செய்யும் பாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆவின் நிலையத்திற்கு கொடுத்து வந்துள்ளனர்.
பாலை கீழே ஊற்றி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் - ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பால் கொள்முதல் செய்யாததைக் கண்டித்து பாலை கீழே கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக இங்கு உற்பத்தி செய்யப்படும் பாலை ஆவின் அலுவலர்கள் கொள்முதல் செய்ய மறுப்பதாக இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது தொடர்பாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் இன்று (மே.11) தங்கள் பகுதிக்கு வந்த ஆவின்பால் வாகனத்தை உற்பத்தியாளர்கள் சிறைபிடித்து பாலை கீழே கொட்டி போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து, போராட்டக்காரர்களின் பாலை ஆவின் நிர்வாகம் பெற்றுக்கொண்டது. அதன்பின்னரே ஆவின் பால் வாகனம் விடுவிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.