இருபது ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சேத்தூர் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. இதற்கு தூய்மைப் பணியாளர் காலனி எனப் பெயரிடப்பட்டது.
உரிய ஆவணங்கள் இல்லாத அவலம்
பல ஆண்டுகள் ஆன நிலையிலும் சேத்தூர் பேரூராட்சி நிர்வாகம் அந்தக் காலனியில் வசிப்பவர்களுக்கு எவ்வித அடிப்படை வசதியும் செய்துகொடுக்கவில்லை. சிதிலமைடைந்த மேற்கூரை, விரிசல் கண்ட சுற்றுச்சுவர், சாலை வசதியில்லை, கேள்விக்குறியான சுகாதாரம் உள்பட இவர்கள் வசிக்கும் இடம் பாழடைந்து காணப்படுகிறது.
இங்கிருக்கும் குழந்தைகள் சாதி சான்றிதழ் கூட வாங்க முடியாமல் தவித்துவருகின்றனர். இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு முகவரி ஏதும் இல்லாததால் ரேசன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைப் பெறமுடியவில்லை.
காரணம் மிகவும் எளிது, ஆனால் அவர்கள் அனுபவிக்கும் துயரம் மிகவும் கொடிது. மாவட்ட நிர்வாகமோ, பேரூராட்சி நிர்வாகமோ இவர்கள் குறித்து அக்கறைப்படவில்லை. பராமரிப்பு இல்லாத வீடுகளில், பச்சிளங்குழந்தைகளுடன் ஆபத்தான சூழலில் தூய்மைப் பணியாளர்கள் வசித்துவருகின்றனர்.