நல்லது கெட்டது எதுவாயினும் அதனை பொதுவில் வெளிப்படுத்த நாம் பயன்படுத்துவது பட்டாசுகளைத்தான். அப்படி நம் வாழ்வோடு இரண்டற கலந்த பட்டாசு உற்பத்தியில், முதன்மையாக இருப்பது விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி. சீனாவிற்கே சவால் விடும் அளவில் சிவகாசி பட்டாசு ரகங்களின் தரமும் வானோக்கி உயர்ந்து விளங்குகிறது. ஆனால், பட்டாசு தொழிலாளர்களின் வாழ்க்கை அவ்வாறு அமையவில்லை.
சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை உள்ளிட்டப் பகுதிகளில் இயங்கி வரும் 1,800க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகளை நம்பி, நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 9 லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. பேப்பர், பிரிண்டிங், சணல் தயாரிப்பு, சாயத்தொழில் போன்ற எண்ணற்ற இதன் சார்பு தொழில் பணியாளர்களும் பட்டாசு தொழிலை சார்ந்தே வாழ்கின்றனர். இந்நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக பட்டாசு தொழில் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
விவசாயம் பொய்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், வேறு மாற்று தொழில் இங்கில்லாததால், வீட்டில் ஒருவர் பட்டாசு வெடி விபத்தில் இறந்தாலும் கூட, மறுநாளே அவ்வீட்டின் மற்றொருவர் அத்தொழிலுக்கே மீண்டும் செல்ல வேண்டிய சூழல்தான் இங்கு நிலவி வருகிறது. இத்தொழிலுக்கு, முதலில் வெடிச்சத்தம், ஒளிக்கீற்று, வேதிப்பொருள் கட்டுப்பாடு என்று ஆரம்பிக்கப்பட்டு பின்னர் சீனப் பட்டாசு, மாசு கட்டுப்பாடு, நேரக் கட்டுப்பாடு, பசுமைப் பட்டாசு என பல பிரச்சனைகள் தொடர்வதால், பட்டாசு தொழிலே அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.