விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த துர்க்கைஆண்டியின் மனைவி மரிய தங்கம். இவர் மல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக, பேருந்து நிலையம் வந்துள்ளார்.
அப்போது, 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் மரிய தங்கத்திடம் வந்து, "எங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது. எங்களிடம் 8 பவுன் தங்க காசு உள்ளது, அதை வைத்து அவசரமாக பணம் ஏற்பாடு செய்ய முடியாது.
நகையாக இருந்தால் உடனடியாகப் பணம் திரட்ட முடியும். இந்தத் தங்க காசுகளுக்குப் பதிலாக, நீங்கள் போட்டிருக்கும் நகையை மாற்றி உதவ வேண்டும்" என்று கேட்டனர்.
இதற்கு ஆரம்பத்தில் மறுப்புத் தெரிவித்த மரிய தங்கம், பின்னர் தன்னிடம் இருந்த 5 பவுன் நகையைவிட அவர்களிடம் 3 பவுன் அதிகமாக கிடைக்கிறதே என்ற ஆசையில் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பின்னர், அருகில் உள்ள நகைக்கடைகளுக்கு அழைத்துச் சென்று, தங்ககாசுகளின் தரத்தை சோதிக்காமல், எடையை மட்டும் பரிசோதித்து, தங்க காசுகளை வாங்கிக் கொண்டு தனது 5 பவுன் நகையை கொடுத்ததாகத் தெரிகிறது.
நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றி நகை பறிப்பு பின்னர், மூன்று பவுன் நகை கூடுதலாக கிடைத்துவிட்டதாக எண்ணிய மரிய தங்கம், நடந்த விவரத்தை நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தனது மகளிடம் தெரிவித்துள்ளார். பின்னர் தங்க காசுகளைப் பரிசோதனை செய்து பார்த்தபோது அது போலி என்பதும் மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி, 5 பவுன் நகை பறிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இது குறித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நகைக்கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம், போலி தங்க காசுகள் கொடுத்து மூதாட்டியை ஏமாற்றிய பெண்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு அவர்களைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:கோவையில் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் பெற்ற பில் கலெக்டர் கைது...!