விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டுவருகிறது. இந்தக் கல்லூரியில் கணிதம், ஆங்கிலம், வணிகவியல், தமிழ் ஆகிய துறைகள் உள்ளன.
இக்கல்லூரியில் மொத்தம் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். இந்தக் கல்லூரியில் பயிலும் பெரும்பாலானவர்கள், சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் பட்டாசு தொழிலாளா்கள், அடித்தட்டு மக்களின் பிள்ளைகளே.
இந்நிலையில் அங்கு ஆறுக்கும் மேற்பட்ட வகுப்புகளுக்கு பேராசிரியா்கள் இல்லாமல் இருந்துவருகிறது. புதிய பேராசிரியா்களை மதுரை காமராசா் பல்கலைக்கழகம் நியமனம் செய்ய காலதாமதம் செய்துவருகிறது. இதனால் மாணவா்களுக்கு போதியளவில் வகுப்பு நடத்தாமல் இருப்பதால் மாணவா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவந்தனர்.
இதனைத்தொடர்ந்து, நேற்று முதல் சாத்தூர் அரசுக் கலைக்கல்லூரியில் பயிலும் அனைத்துத் துறை சார்ந்த இறுதியாண்டு மாணவர்கள் 240 பேருக்கு காலவரையற்ற கட்டாய விடுப்பு அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளது கல்லூரி நிர்வாகம்.
இதனால் கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவா்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாக கல்வியாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த மாதம் வரவிருக்கும் பருவத் தோ்வு வரவுள்ள நிலையில் மாணவா்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கியிருப்பது மாணவா்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்கையில், கூடிய விரைவில் புதிய பேராசிரியா்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அதுவரை மாணவா்கள் விடுப்பில் இருக்கலாம் எனக் கூறியுள்ளார். இந்த விடுமுறை மாணவர்களின் கல்வியை பாதிக்காதவாறு மாற்றம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அரசு கலைக்கல்லூரி இந்தப் பிரச்னையில் அரசு உடனடியாக தலையிட்டு விரைவில் தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர் தரப்பில் அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர். இவர்களின் இந்த நிலைகண்டு பெற்றோர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.