இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்கின்றனர். இதன் மூலம் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றி வருகின்றனர். அங்கு கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 900 பேர் விருதுநகர் மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி, பள்ளிகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு மஹாராஷ்டிராவில் இருந்து விருதுநகர் மாவட்டம் பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வந்தனர். அவர்களை விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் அந்த குடும்பத்தில் மூன்று வயது பெண் குழந்தை, பத்து வயது சிறுவன் உள்பட ஐந்து பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, ஐந்து பேரையும் விருதுநகர் தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், கடந்த சில தினங்களாக விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுவரை, அங்கு 74 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.