விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் மா விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு அதிக அளவில் மா விளைச்சல் இருந்தாலும் விற்பனை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம், தற்போது தற்காலிக மாங்காய் மொத்த மார்கெட்டாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மொத்தமாக ஏலம் எடுக்கும் வியாபாரிகள் கிலோ ஐந்து முதல் 10 ரூபாய் வரை மட்டுமே ஏலம் எடுத்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில், ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (அக்ரி) சங்கர் நாராயணன் தோட்டக்கலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை விற்பனை துணை இயக்குநர் சரஸ்வதி, தோட்டக்கலை உதவி இயக்குநர் கலைவாணி உள்ளிட்ட அலுவலர்கள் விவசாய சங்கத் தலைவர்கள், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, மாங்காய்களை அதிக விலைக்கு ஏலம் எடுக்க வேண்டும் என வியபாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.