விருதுநகர் மாவட்டம் பஜார் காவல் நிலையம் அருகேவுள்ள தனியார் விடுதியில் ஒரு கும்பல் சட்டவிரோதமாக இரிடியத்தைப் பதுக்கிவைத்து விற்பனை செய்யவுள்ளதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து விருதுநகர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அருணாசலம் தலைமையிலான காவல் துறையினர் தனியார் விடுதிக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, 11 பேர் கொண்ட கும்பல் இரிடியத்தைப் பதுக்கிவைத்து பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சிசெய்தது தெரியவந்தது.
பின்னர், 11 பேர் கொண்ட கும்பலை கைதுசெய்த காவல் துறையினர், அவர்கள் பதுக்கிவைத்திருந்த மூன்று கிலோ எடை கொண்ட இரிடிய கலசம், நான்கு சொகுசு கார்கள் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆமத்தூர் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள் பெங்களூரு, ஹைதராபாத், நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த ராம்பிரசாத், கணேஷ், பொன்னரசு, ஜோசப் கென்னடி, கருப்பசாமி, கருப்பையா, வினோஜ், சதீஸ், குப்புசாமி என்பது தெரியவந்தது.