சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து விருதுநகர்: சாத்தூர் அருகில் உள்ள கங்கரகோட்டை பகுதியில் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த கேசவன் என்பவருக்குச் சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் நாக்பூர் உரிமம் பெற்று, பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், இந்த பட்டாசு ஆலையில் சுமார் 60 அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 22) வழக்கம் போல காலை முதலே பட்டாசு தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பிற்பகல் நேரத்தில் வேதிப்பொருட்கள் வைத்திருந்த அறையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் இரண்டு அறைகள் தரைமட்டமாகின.
மேலும், கட்டட இடுப்பாடுகளில் சிக்கிய மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மனைவி ஜெயசித்ரா (24) என்பவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த வெடி விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏழாயிரம் பண்ணை மற்றும் சாத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
மேலும், கட்டட இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என்று மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 12க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் சேதம் அடைந்துள்ளது. மேலும், இந்த பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து ஏழாயிரம் பண்ணை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இதனிடையே பட்டாசு ஆலை விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கரகோட்டை வருவாய் கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மார்க்கநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா( வயது 24) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பட்டாசு தொழிலாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. சிவகாசி கல்லூரியில் தொடங்கப்பட்ட புதிய வசதி!