சென்னை:விருதுநகர்மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் பகுதியில் வெளிநாட்டுக்கு கடத்தி செல்வதற்காக சிலர் யானை தந்தங்களை பதுக்கி வைத்திருப்பதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு (Central Revenue Intelligence Department) ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னை மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை பிரிவினர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவல்லிபுத்தூர் விரைந்தனர்.
அங்கு டி.ஆர்.ஐ(DRI) தனிப்படை நடத்திய தீவிர விசாரணையில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 3 பேரை மடக்கிப் பிடித்து அவர்கள் வைத்திருந்த இரண்டு யானை தந்தங்களையும் பறிமுதல் செய்தனர். யானைத் தந்தங்களின் எடை 21.63 கிலோ எனவும் அவை பல கோடி ரூபாய் மதிப்புடையது என்று கூறப்படுகிறது.
இதை அடுத்து மூன்று பேரிடமும் டி.ஆர்.ஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, இந்த யானைத் தந்தங்களை மர்ம கும்பல் சிலர் கடத்திக் கொண்டு வந்து தங்களிடம் கொடுத்ததாகவும் அவர்கள் இதை சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு கடத்திச் சென்று பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து மூன்று பேரையும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972ன் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த யானைத் தந்தங்களை இவர்களிடம் கொடுத்த மர்ம கும்பலை பிடிப்பதற்காகவும் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் தமிழ்நாடு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.