இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பணிகளும், அரசியல் கட்சிகளின் பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், விருதுநகர் அமமுக நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பரமசிவ ஐயப்பன் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்தார். அதில் அவர் பேசியதாவது, விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் பொறுப்பாளராக இருப்பதால் இந்த தொகுதியில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் தொடர்ந்து என் கவனத்திற்கு வந்து கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.
மேலும், இந்தத் தொகுதியின் முக்கியமான தொழில்களான பட்டாசு தொழில், தீப்பெட்டித் தொழில், அச்சுத் தொழில், நெசவுத் தொழில், கைத்தறி ஆகியவை மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் மிகவும் நலிவடைந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என வருத்தம் தெரிவித்தார்.
அதேபோல், நாடாளுமன்ற உறுப்பினரான பின்பு இந்தப் பிரச்னைகளெல்லாம் சரிசெய்ய கடுமையான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று வாக்குறுதியளித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின் பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத புதிய மாற்று அணி மத்தியிலே உருவாகும் என்றும் ஆருடம் தெரிவித்தார்.
அமமுக நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பரமசிவ ஐயப்பன்