தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது சிவகாசிப் பட்டாசுகள்தான்! இந்தியாவின் ஒட்டு மொத்த பட்டாசு தேவையில் 90 விழுக்காட்டை சிவகாசி பட்டாசுகள் பூர்த்தி செய்கின்றன.
இருப்பினும், சீன பட்டாசுகளின் வருகை, காற்று மாசு காரணமாக பட்டாசுகளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால் பட்டாசு உற்பத்தியாளர்களும் சரி, விற்பனையாளர்களும் சரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக படித்த பள்ளித் தோழிகள் பட்டாசுக் கடையில் இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் சிவகாசியில் நடந்துள்ளது.
கடந்த முறை விருதுநகர் நகராட்சி சேர்மனாக இருந்தவர் சாந்தி மாரியப்பன். இவர் தற்போது சிவகாசி அருகே பட்டாசுக்கடை நடத்தி வருகிறார். இன்று வழக்கம்போல அவர் தனது கடையில் விற்பனையை கவனித்து வந்தார். அப்போது, கடைக்கு வந்த ஒரு பெண்ணை பார்த்ததும் சாந்தி மாரியப்பனுக்கு இன்ப அதிர்ச்சி.
ஏனென்றால், கடைக்கு வந்த தோழி வேறும் யாரும் இல்லை...சாந்தி மாரியப்பனின் பள்ளித் தோழி சாந்தி செல்வராஜ். இவர்கள் இருவரும், மூன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை திருத்தங்கலில் உள்ள பள்ளியில் ஒன்றாகப் படித்த இணைபிரியா தோழிகள்.
பள்ளிப்படிப்புக்கு பின், குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இவர்கள் பிரிந்து சென்றுவிட்டனர். ஸ்மார்ட்போன், இணையதளம் உள்ளிட்ட நவீன தொடர்பு சாதனங்கள் ஏதும், அப்போது இல்லாததால் இருவருக்கும் இடையே எந்தத்தொடர்பும் இல்லாமல் போய்விட்டது.
தொடர்பு இல்லாமல் போனாலும்கூட, இருவரும் பள்ளி நட்பு குறித்த இனிய நினைவுகளை சுமந்தபடியே இருந்தனர். இதனால்தான் கடைக்குள் நுழைந்த பள்ளித் தோழியை நொடிப்பொழுதில் சாந்தி மாரியப்பனால் அடையாளம் காண முடிந்தது.