விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே அலமேலுமங்காபுரத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் உயிரிழந்தார். மேலும், இவ்விபத்தில் 3 கல்லூரி மாணவிகள் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்திலிருந்து - சிவகாசி நோக்கி இன்று (நவ.14) அரசு பேருந்து 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தை பண்டிதம்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கமணி (47) என்பவர் ஒட்டி வந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் செவல்பட்டியை அடுத்த அலுமேலுமங்கைபுரம் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த செவல் பட்டியைச் சேர்ந்த பெண் முத்துமாரி(23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் அதிர்டவசமாக, இவருடைய இரண்டு மாத பெண் குழந்தை உயிர் தப்பியது.
மேலும் விபத்து குறித்து தகவலறிந்த வெம்பகோட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பொதுமக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில், இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து வெம்பகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கேரளாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் எதிரொலி... நீலகிரி மாவட்ட எல்லையில் கண்காணிப்பு தீவிரம்!