விழுப்புரம் மாவட்டம் சுதாகர் நகர் கரிகாலன் தெரு பகுதியில் வசித்துவருபவர் நடராஜன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியராவார். இவருடைய மனைவி இந்திரா (56). இந்திரா தன்னுடைய சொந்த வீட்டில் முதல் தளத்தில் வசித்து வந்தார்.
இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துக்கொண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடராஜன் வெளியூர் சென்றுவிட்டு இன்று வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இந்திரா ரத்தவெள்ளத்தில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனையடுத்து நடராஜன் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் டிஎஸ்பி சங்கர் தலைமையிலான காவல் துறையினர், கை ரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்திவருகின்றனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்டுள்ள இந்திரா பலரிடம் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்ததால், பணம் கொடுக்கல்-வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கொள்ளையடிக்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விழுப்புரம் தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட இந்திராவின் கணவர் நடராஜன் மீதும் காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடமும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வாழ்க்கையில் சாதிக்க பாலினம் தடையில்லை: இந்தியாவின் முதல் திருநங்கை செவிலி!