ஒரு சமூகம் முன்னேற அடிப்படைத் தேவையே கல்விதான். கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்ற அம்பேத்கரின் முழக்கம் அதற்கான வழிகாட்டல். இதனை புரிந்துகொண்டு இருளர் இன மக்கள் தொடர்ச்சியாகப் போராடினாலும் அவர்களுக்கான தீர்வு இன்னும் கிட்டியபாடில்லை.
2011ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு 80 விழுக்காட்டுக்கு மேல் வந்தபோதும், இருளர்களின் எழுத்தறிவு விகிதம் 36 விழுக்காடு மட்டுமே. இன்னும் இருளர் சமுதாயம் இதே சிக்கலைச் சந்திப்பதுதான் வேதனையின் உச்சம். விழுப்புரம் மாவட்டம் தி.பரங்கனி கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிப்பவர்களுக்கு மின்சாரம், இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இருந்தாலும்கூட, இவர்களின் குழந்தைகள் உயர்நிலைக் கல்வி பெறமுடியாமல் பின்தங்கியுள்ளனர்.
இதே பகுதியில் வசிக்கும் முனியாண்டி, தாட்சாயிணி தம்பதியின் மூன்றாவது மகள் தனலெட்சுமி. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில், இவர் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் சாதிச் சான்றிதழ் இல்லாததால், உயர்கல்வி எட்டாக்கனியானது.
இது குறித்து தனலெட்சுமி கூறுகையில், “என் பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள்தான். எனது சகோதரிகள் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் சாதி சான்று இல்லாமல் உயர்கல்வியை பெறமுடியவில்லை. இதனால் அவர்களுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டார்கள். நான் இந்த கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டேன். அடுத்து உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்பது எனது கனவு. கணிதத் துறையில் சாதிக்கவேண்டும். எங்களுக்கான சாதி சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில் இருளர் சமுதாயத்தின் தலையெழுத்தே மாறிவிடும்” என்கிறார்.
தனலெட்சுமி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 438 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பெற்றார். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 388 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 354 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் 4 ஆவது இடம் பிடித்துள்ளார். ஆனால் சாதி சான்று இல்லாமல் இவருடைய கல்வி தடைபட்டுள்ளது.
எஸ்டி பிரிவினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு முன், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை செய்ய அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அரசு அலுவலர்கள் வருவது வழக்கம். இப்படி தனலெட்சுமி வசிக்கும் பகுதிக்கு விசாரணைக்கு அலுவலர்கள் வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வேற்று சமூகத்தினர், அவருக்குச் சாதிச் சான்றிதழ் வழங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல், எஸ்டி பிரிவில் சாதிச் சான்றிதழ் வழங்கக் கூடாது என்றும், எம்பிசி பிரிவில்தான் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில், தனலக்ஷ்மியை அவர்கள் தாக்க முயற்சி செய்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிளியனூர் காவல் துறையினர், அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், துரைக்கண்ணு, ஏழுமலை, துரைக்கண்ணு ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஒரு பக்கம் சாதி சான்று கிடைக்காமல் கல்வி தடைபடுகிறது, மறுபக்கம் சாதிகளுக்குள் எழும் முரண்பாடுகளால் இருளர் இன மக்கள் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது குறித்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் களப்பணியாளர் ராஜேஷ் கூறுகையில், “பழங்குடி இருளர் சமூகத்தின் வாழ்வியலுக்கு இடையில் தனலெட்சுமி பெற்றிருக்கும் மதிப்பெண்கள் பாராட்டக்கூடியது. இவர்களின் கல்விக்கு முக்கிய தடையாக இருப்பது சாதி சான்றிதழ்கள் கிடைப்பதுதான். இந்த சமூகத்தின் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டுமென்றால் உயர்கல்வி அவசியம். இதனைப் புரிந்து கொண்ட மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றனர். ஆனால் சாதி சான்று அவர்களின் கல்வியை தடை செய்கிறது” என்றார்.
இருளர் இன மாணவர்களுக்கு எட்டா கனியாக இருக்கும் கல்லூரி கனவு! இது போன்ற பிரச்னை இருளர் இனத்திற்கு மட்டுமல்ல, காட்டு நாயக்கர்கள், ஆதியன் பழங்குடியினர் (பூம் பூம் மாட்டுகாரர்கள்) போன்ற 36 வகையான பழங்குடியினரில் பெரும்பாலோனுருக்கு இருக்கிறது. அரசு உடனடியாக இப்பிரச்னைகளை களைய வேண்டும் எனவும் ராஜேஷ் கூறினார்.
இவர்களைப் போன்ற சமுதாயத்தின் பின்தங்கிய வகுப்பினரின் தரத்தை உயர்த்தவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களுக்கு இருக்கும் ஒரே பிடிப்பு கல்வியும், அரசு இயந்திரமும்தான். அந்த கல்வியும் இப்போது கானல் நீராவது அறமான செயல் அல்ல. இவர்களுக்கு கல்வி கிடைப்பதற்கு தடையாகயிருக்கும் அத்துணை காரணிகளையும் அரசு சரி செய்யவேண்டும்.
இதையும் படிங்க: ஆன்லைன் கல்வியா? ஸ்மார்ட்போன், டிவியில்லாத நாங்கள் என்ன செய்வது? பழங்குடியின மாணவர்கள்!