கரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக காய்கறி சந்தை, பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள் மட்டும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் காய்கறி சந்தையில் பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி செல்ல குவிந்துள்ளனர்.
சுதந்திரமாக நடமாடும் விழுப்புரவாசிகள்! காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 1 மீட்டர் இடைவெளியில் வட்டம் இடப்பட்டிருந்தாலும், அதனை யாரும் பொருட்படுத்தவே இல்லை. காவல்துறை தரப்பில் எவ்வளவு அறிவுரைகள் வழங்கினாலும், அதனை கண்டுகொள்ளாமல் பொதுமக்கள் தங்கள் விருப்பப்படி வெளியில் நடமாடிவருகின்றனர். கனரக வாகனங்கள் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் சாலையில் இயக்கப்படுகின்றன.
இதனிடையே, அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டிவருகின்றனர். இதேபோல், பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருசக்கர வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்த காட்சிகளை பார்க்கும் போது ஊரடங்கு உத்தரவு என்பதிலிருந்து விழுப்புரத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. விழுப்புரத்தில் இதுவரை 3 பேருக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்பும், பொதுமக்கள் கவலைப்படாமல் பொதுவெளியில் நடமாடிவருகின்றனர். சமூக விலகல் ஒன்றே கரோனாவில் இருந்து காப்பாற்றும் என்ற விழிப்புணர்வு பல்வேறு வகையில் ஏற்படுத்தப்பட்டாலும், கடுமையான நடவடிக்கைகளின்றி மக்கள் உணரமாட்டார்கள் போலிருக்கிறது. மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகவுள்ளது.
இதையும் படிங்க: கோயம்பேடு மார்க்கெட் கழிவு குறைவு!