தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாகன ஓட்டிகளின் நண்பன்.. போக்குவரத்து காவலரின் அட்வைஸ்! - Traffic Police Viral Video

சாலை விதிகளைப் பின்பற்றி தேவைக்காக மட்டுமே பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கிய விழுப்புரம் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 14, 2023, 1:46 PM IST

விழுப்புரம்:இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல அதிவேக வாகனங்கள் தினந்தினம் சந்தைகளில் இறக்குமதியாகின்றன. இவ்வாறு விற்பனைக்கு வரும் அதிவிரைவு வாகனங்களால் நன்மைகள் ஏற்படும் அளவிற்குத் தீமைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்தவகையில், ஓரிடத்திற்குச் சீக்கிரம் செல்ல வேண்டும் என்பதற்காக நாம் மேற்கொள்ளும் அதிவேக பயணமானது சில நேரங்களில் ஆபத்தாக முடிகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சில நேரங்களில் அதிக ஒலி சத்தத்துடன் சீறிப்பாயும் நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களால் பல நேரங்களில் விபத்து ஏற்பட்ட வண்ணம் தொடர்கதையாகி வருகின்றன. காவல்துறை அதிகாரிகள் என்னதான் அபராதம் மற்றும் எச்சரிக்கை விடுத்தாலும், அதனை வாகன ஓட்டிகள் பெரிதாகக் கண்டு கொள்வதில்லை. வாகன சோதனையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளைக் கண்டாலே சிலர் குறுகிய மாற்றுப்பாதைகளில் தப்பித்து தங்களுடைய பயணத்தை மேற்கொள்ளும் நிகழ்வுகளும் அனுதினம் நடந்தேறி வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கவரி சாவடியில் விழுப்புரம் போக்குவரத்து காவல்துறையினர் நேற்று (பிப்.13) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்து உதவி ஆய்வாளர் தலைக்கவசம் அணியாமலும் அதிவேகமாகவும் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களிடம் பயணம் மிகவும் ஆபத்தானது, தேவை ஏற்பட்டால் மட்டுமே பயணத்தை மேற்கொள்ளுங்கள், தேவையற்ற பயணத்தை நெடுஞ்சாலைகளில் தவிருங்கள் என்று அறிவுறுத்தினார்.

மேலும், முறையான தலைக்கவசம் மற்றும் பயணத்தின்போது, உங்கள் உடலை பாதுகாக்கும் உபகரணங்களுடன் பயணங்களை மேற்கொள்ளுங்கள், ஓர் இடத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும் என்று முற்பட்டால் அதற்காக சில மணித்துளிகளை முன்கூட்டியே யோசித்து பயணத்தை மேற்கொள்ளுங்கள் என்று பொறுமையாக எடுத்துரைத்தார். அத்தோடு, தேவைக்காக மட்டுமே பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம் என வாகன ஓட்டிகளை உறுதிமொழியும் எடுக்க வைத்து அறிவுரை வழங்கினார்.

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரின் இத்தகைய செயல் வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது இப்படியும் ஒரு காவல்துறை அதிகாரியை என மக்களிடம் இவர் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இவ்வாறு போக்குவரத்து காவல் உதவியாளர் வாகன ஓட்டிகளுக்கு அக்கறையுடன் அறிவுரை வழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் நலனில் அக்கறையுடன் உள்ள இந்த போக்குவரத்து காவல் உதவியாளருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க: குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவிக்கு ஆட்சியர் கொடுத்த சர்ப்ரைஸ்!

ABOUT THE AUTHOR

...view details