இயற்கை மிகவும் வித்தியாசமானது; அதியசங்கள் நிறைந்தது. அதுபோன்ற அதிசயங்களை தேடி பார்த்து ரசிப்பது வாழ்க்கையை இன்னும் அழகாக்கும். அப்படியான ஒரு இயற்கையின் அறிவியல் அதிசயம்தான் விழுப்புரத்தில் உள்ள கலமர பூங்கா.
விழுப்புரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவக்கரை. பலருக்கு ஆன்மிக தலமாக அறிமுகமாகியிருக்கும் இந்த ஊரின் மற்றொரு வரலாற்று சிறப்புதான் தேசிய கல்மரபூங்கா. 1957ஆம் ஆண்டு மத்திய புவியியல் துறை மூலமாக தொடங்கப்பட்ட இந்த கல்மரபூங்கா தற்போது 19 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட கல்மரங்கள் தற்போது சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த கல்மரங்கள் எப்படி உருவானது என்பது குறித்து கிராமவாசி ரமேஷ் கூறுகையில், "மகாவிஷ்ணு தேவர்களுக்கு தந்த வரத்தை அபகரித்துவிட்டு அரக்கர்கள் சென்றபோது, இந்த இடத்தில் வைத்து அரக்கர்களை மகா விஷ்ணு அழித்துள்ளார். அந்த அரக்கர்களின் எலும்புகள்தான் தற்போது, இங்கு கல்மரங்களாக இருக்கின்றன” என்றார்.
இந்த பூங்காவை சுற்றி பாதுகாப்புக்காக ஐந்து அடி உயரம் வரை கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், போதிய பராமரிப்பின்றி சுற்றியிருந்த கம்பிவேலி சேதமடைந்து சமூக விரோதிகள் எந்நேரமும் உள்ளே சென்றுவரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வரலாற்று சின்னமான கல்மரங்கள் சேதப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்துள்ள கம்பிவேலியை சீரமைத்து சுற்றிலும் சிசிடிவி பொருத்த மத்திய புவியியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விழுப்புரத்தில் பாராமரிப்பற்று கிடக்கும் அறிவியல் அதிசய பகுதி இது குறித்து எழுத்தாளர் கோ.செங்குட்டுவன் கூறும்போது, "இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரளயத்தால் அருகில் இருக்கும் சங்கராபரணி ஆற்றில் அடித்துவரப்பட்ட மரங்கள் மண்ணில் புதைந்துள்ளன. இந்த மரங்கள் மீது படிந்த மணல்துகள்களில் சிலிக்கான் என்ற வேதி பொருள் உருவாகிறது. இந்த வேதிபொருள் மரத்தை கல்லாக மாற்றியுள்ளது. தமிழ்நாட்டிலேயே விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை பகுதியில்தான் ஏராளமான கல்மரங்கள் காணப்படுகின்றன. இவை பாதுகாப்பட வேண்டிய பொக்கிஷம். நமக்கு இயற்கையாக கிடைத்த கல்மர துண்டுகளை நாம் முறையாக பராமரிக்க வேண்டும்.
திருவக்கரையில் உள்ள கல்மரபூங்கா முறையான பராமரிப்பு இன்றியும், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் உள்ளது. மேலும் அங்கு வரக்கூடிய அறிவியல் ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கு கல்மரபூங்கா குறித்து விளக்கும் வகையில் அங்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இதேபோல் கல்மரபூங்கா உள்ள பகுதியில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதி இப்படி பராமரிப்பின்றி காணப்படுவது வேதனையை தருகிறது" என்றார்.
பல நூற்றாண்டுகள் கடந்தாலும் காலத்தால் அழியாத இந்த கல்மர துண்டுகள், தற்போது பொது வெளியில் மழையிலும், வெயிலிலும் முறையான அளவில் பராமரிப்பின்றி கிடப்பதால் அழிந்துவருகிறது. அதனால் இதனை பாராமரித்து இயற்கையின் அறிவியல் அற்புதத்தை நம் வருங்கால சந்ததிகளுக்கு சான்றாக வைக்க அரசு முன்வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க...விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தமிழ்நாட்டில் தடை!