விழுப்புரம்: அன்பு ஜோதி ஆசிரம வழக்கில் கைதான 8 பேரையும் மூன்று நாட்கள் சிபிசிஐடி காவல் விசாரணைக்கு அனுமதித்துள்ள நீதிமன்றம், பிப்ரவரி 28-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு மீண்டும் ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், காணாமல் போன 3 பேர் குறித்து தகவல் தெரிவிந்தவர்கள் சிபிசிஐடி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என சேலம் மாநகர குற்றப் புலனாய்வு துறை ஆய்வாளர்(பொறுப்பு விழுப்புரம் மாவட்டம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் வசித்து வந்த முதியவர் ஜபருல்லா (70) என்பவர், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி, விழுப்புரம் அடுத்த குண்டலபுலியூரில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர் இங்கிருந்து பெங்களூரு பகுதியில் உள்ள 'ஹோம் ஆப் ஹோப்' காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி முதல் அவர் காணாமல் போனதாக தெரிகிறது.
இதே போன்று திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அடுத்த சங்கரன்கோவிலில் வசித்து வந்த சிவசங்கரன் மனைவி லட்சுமி அம்மாள் (80) (பார்வை குறைபாடு உடையவர்), இவரது மகன் முத்துவிநாயகம் (48) ஆகிய இருவரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி முதல், இவர்கள் இருவரும் காணாமல் போனதாக தெரிகிறது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.