விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வீரணாமூர் கிராமம். இங்குள்ள ஏரிக்கரை பகுதியில் 25-க்கும் மேற்பட்ட இருளர் குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.இந்தக் குடியிருப்பில் வசித்துவரும் சின்னசாமி-லட்சுமி தம்பதிக்கு சங்கீதா (18), அனிதா (13), கவிதா (9) என மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
மின்சாரம், சாலை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத சிறிய ஓலை வீடுதான் சின்னசாமியின் வீடு. வாட்டியெடுக்கும் வறுமை, இருளர் சமூகத்துக்கே உரிய பிரச்னைகள் என அனைத்தையும் கடந்து தனது மூன்று மகள்களையும் படிக்கவைத்து-வருகின்றனர் சின்னசாமி-லட்சுமி தம்பதி. சென்னையில் உள்ள செங்கல் சூளையிலிருந்து கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்கள்தான் சங்கீதாவின் பெற்றோர்.
இத்தனை தடைகளையும் தாண்டி படித்துவந்த சங்கீதா கடந்தாண்டு நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 263 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிப்பெற்றார். 263 மதிப்பெண்கள் என்பது வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு குறைவானதாகத் தோன்றலாம். ஆனால், சங்கீதாவின் இந்த வெற்றி இருளில் மூழ்கியிருக்கும் அச்சமூகத்தினருக்கான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஒருபுறம் வீரணாமூர் இருளர் குடியிருப்பில் முதல் ஆளாக 12ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றுள்ளோம் என்ற மகிழ்ச்சி, மறுபுறம் மேல்படிப்பு என்பது நமது சமூகத்துக்கு எட்டாக்கனியாக உள்ளதே என்ற வருத்தம்.
இந்நிலையில் சிலரின் உதவியால் செஞ்சி அருகேயுள்ள தனியார் கல்லூரியில், இளங்கலை முதலாமாண்டு செவிலியர் படிப்பு பயின்றுவருகிறார்.இதற்காக தினமும் காலை 6 மணிக்கெல்லாம் தனது வீட்டிலிருந்து கிளம்பும் சங்கீதா, செஞ்சி சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலம் கல்லூரி செல்கிறார்.