விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது மழவந்தாங்கள் கிராமம். இந்தக் கிராமத்தில் நேற்று (ஏப்.18) மாலை சுமார் 4.30 மணி அளவில் இரண்டு கார்களில் வந்த சிவன், ராஜேந்திரா, ராஜேஷ்கண்ணன், சம்பத், வெங்கடேஷ், நாகராஜ் ஆகிய ஆறு பேரும் மழவந்தாங்கல் கிராம எல்லையில் விற்பனைக்காக இருந்த இடத்தை பார்வையிட்டு வந்தனர்.
அப்போது, அவர்களைப் பின்தொடர்ந்து சொகுசு காரில் வந்த மற்ற சில நபர்கள் துப்பாக்கி முனையில் சிவன், ராஜேந்திரன் இருவரையும் காரில் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடத்தப்பட்ட சிவனுடன் வந்த மற்ற நபர்களான சம்பத், ராஜேஷ்கண்ணன் இருவரும் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து, இது குறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், கடத்திச் செல்லப்பட்ட நபர் யார், எதனால் கடத்தப்பட்டார்கள் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் உடனடியாக தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்துள்ளார்.