விழுப்புரம்:மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையம் ஆத்திக்குப்பம் இடையே, கழுவெளியில் 300 மீட்டர் நீளத்திற்கு தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக மழை நீர் பக்கிங்காம் கால்வாய்க்கு சென்று கடலில் கலக்கும்.
கழுவெளியில் வெள்ளப்பெருக்கு இந்த தரைப்பாலமானது வண்டிப்பாளையம் கிராமத்தை அடுத்த ஓமிப்பேர், நடுகுப்பம், கிளாப்பாக்கம், நாணக்கால் மேடு ஆகிய கிராமங்களையும், அனுமந்தை அடுத்த ஆட்சிப்பாக்கம், ஊரணி, பாலக்காடு, ஆத்திக்குப்பம், கீழ்பேட்டை, செட்டி நகர், செட்டிகுப்பம், செய்யங்குப்பம் ஆகிய கிராமங்களை இணைக்கும் முக்கிய தரைப்பாலமாக உள்ளது. இந்த தரிப்பாளையத்தின் வழியாக 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மரக்காணம் நகரத்திற்கும், புதுச்சேரிக்கும் சென்று வருவர்.
இந்நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் கழுவெளியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தரைப் பாலத்திற்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சுற்றுப்புற கிராம மக்கள் மரக்காணம் வழியாக 20 கி.மீ. துாரம் சுற்று வழியில் நகரத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், திண்டிவனத்தில் இருந்து வண்டிப்பாளையம் வழியாக அனுமந்தை கிராமத்திற்கு வந்த அரசு பஸ் வெள்ளம் காரணமாக நிறுத்தப்பட்டது. தரைப்பாலத்தின் வழியே வாகனங்கள் சென்று அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மரக்காணம் காவல்துறை சார்பில், பேரிக்கார்டுகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தில் அதிகபட்சமாக 49 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மிக்ஜாம் புயல்: போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் - மு.க.ஸ்டாலின் அறிக்கை!