விழுப்புரம்: கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பாதுகாப்புப் பணிக்கு சென்று இருந்த பெண் ஐபிஎஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அனைத்து அரசு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி இன்று தீர்ப்பளித்து உள்ளார்.
அதில் இவ்வழக்கின் முதல் குற்றவாளியான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அவர்களுக்கு 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் மூன்றாண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத் தொகையை கட்டாத பட்சத்தில் மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை எனவும் தீர்ப்பளித்தார் மேலும் இரண்டாவது குற்றவாளியான செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்ணன் அவர்களுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் ஈடுபட்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்து கொண்டு சென்றபோது பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டிஜிபி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டிஜிபி திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், சிறப்பு டிஜிபி மீதான புகாரை கொடுக்க சென்ற பெண் எஸ்பிஐ தடுத்து நிறுத்தியதாகவும் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த புகார் தொடர்பாக ராஜேஸ் தாஸ் மற்றும் அவரது உத்தரவின் படி பெண் எஸ்பி அதிகாரியை மிரட்டி கார் சாவியைப் பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகளாக சேர்க்கப்பட்ட 68 சாட்சிகளின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று நிறைவு அடைந்தது.
இந்த வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியது. அதுபோல் இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசு தரப்பு சாட்சிகள் அளித்து உள்ள சாட்சியங்கள் குறித்தும், அந்த குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் எந்த வகையில் நிரூபணம் செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்த அரசு தரப்பின் வாதம் கடந்த வாரம் முடிவு அடைந்தது. அது போல் முன்னாள் சிறப்பு டிஜிபி செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.