விழுப்புரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன் உத்தரவின்பேரில் கூடுதல் எஸ்பி தேவநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்தில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்துவந்த 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் பையூர் கிராமத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பவரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கோபி, அவரின் சகோதரர்கள் இருவரும் சேர்ந்து ரஜினி லாட்டரி ஏஜென்சி என்ற பெயரில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் பல ஏஜெண்டுகளை நியமனம் செய்து, குறிப்பாக கிராமப்புற மக்களை குறிவைத்து சட்டவிரோதமாக லாட்டரி தொழில் செய்துவந்தது தெரியவந்தது.