நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில், காவல் நிலையம் எதிரே இருந்த அம்பேத்கரின் சிலை சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், விழுப்புரத்தில் இன்று அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நீதிமன்ற பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்கர் சிலையை உடைத்த நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிலையை உடைத்த நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தின் நடுவே செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், "சிலை அவமதிப்பு மற்றும் சிலை உடைப்பு சம்பவங்கள் தொடர்ந்து இந்தியா முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது. தேசிய தலைவர்களின் சிலையை அவமதிக்கும்போது, நாட்டின் ஒற்றுமை கேள்விகுறியாகிவிடுகிறது. இதுபோல் சிலையை அவமதிக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்றார்.
அம்பேத்கர் சிலை உடைப்பு: சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் இதேபோல் திருச்சி, ஈரோடு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் சிலை உடைப்பை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.