விழுப்புரம்:முகையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆற்காடு கிராமம் வித்யாஸ்ரீயின் சொந்த ஊர். தந்தை அண்ணாமலை(65) விவசாயக் கூலி கரும்பு வெட்டும் வேலை செய்கிறார். தாயார் பழனியம்மாள்(53) சிறிய வருமானத்தை வைத்து குடும்பத்தை பசியில்லாமல் வழி நடத்துகிறார் வித்யாஸ்ரீயுடன் உடன் பிறந்தவர்கள் 5 பேர். வித்யஸ்ரீதான் குடும்பத்தில் மூத்தவர். மூன்று தங்கைகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடைசி தங்கைக்கும் திருமண ஏற்பாடு நடந்து வருகிறது.
30 வயதாகும் வித்யாஸ்ரீ எம் ஏ ஆங்கிலம் மற்றும் பி எட் படித்துள்ளார். பாட்டி வீரம்மாள் வித்யாஸ்ரீ 5 வயதாக இருக்கும் பொழுது, அவரை அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பூர் நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கச் சென்றுள்ளார்.
இரண்டு கால்களையே இரண்டு கைகளாக மாற்றி வாழும் சாதனைப் பெண்மணி இரண்டு கைகளும் இல்லை என்கிற காரணத்தை கூறி வித்யாஸ்ரீயை பள்ளியில் சேர்க்க மறுத்துள்ளார் தலைமை ஆசிரியர். அவரிடம் கோபமடைந்த பாட்டி வீரம்மாள் அரசுப் பள்ளி எங்களுக்கானது, எங்கள் பிள்ளையை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளையை சேர்க்காமல் இங்கு இருந்து போகவே மாட்டேன் என்று உறுதியாக இருந்துள்ளார். அச்சமயம் சதீஷ்குமார் என்ற ஒரு ஆசிரியர் வித்யாஸ்ரீயை பள்ளியில் சேர்ப்பதற்கு பெருமளவு உதவியாக இருந்து பள்ளியில் சேர்த்துள்ளார்.
பாட்டி கொடுத்த தன்னம்பிக்கை:பள்ளியில் எப்படி புத்தகங்களை படிப்பாய் எப்படி எழுத்துக்களை எழுதுவாய் என்று தலைமை ஆசிரியர் கேட்க அந்த ஒரு கேள்வி, கல்வி மீதான ஒரு வெறியை ஏற்படுத்தியது.
கேள்வி கேட்ட தலைமையாசிரியருக்கு, தன் பாட்டி வீரம்மாள் கொடுத்த பதிலடி "என் பேத்திக்கு கைகளாக நான் இருக்கிறேன்..."என்ற அந்த ஒரு வார்த்தை இன்றளவும் தான் ஒரு உயர்ந்த பதவிக்கு வர வேண்டும் என்கிற லட்சியத்தை தூண்டுகிறது என்கிறார் வித்யாஸ்ரீ.
கால்களே இரண்டு கைகள்:தன் கால்களையே கைகளாக மாற்றிக் கொண்டு எழுதுவதற்கும், படிப்பதற்கும் அதை பயன்படுத்தத் தொடங்கினேன். பிற்காலத்தில் தன்னுடைய அனைத்து தேவைகளுக்கும் கால்களையே பயன்படுத்தத் தொடங்கினேன்.
தற்போது உள்ள கணினி யுகத்தில் செல்போன் உபயோகப்படுத்த கூட இரு கால்களை தான் பயன்படுத்தி வருகிறேன். என்னுடைய செல்போனில் நம்பர் lock கூட போட்டு வைத்திருக்கிறேன். அதையும் கூடகால் விரல்களை கொண்டு un lock செய்வதாகவும், தன் வாழ்வில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை விளக்கினார்.
இரண்டு கால்களையே கைகளாக மாற்றி வாழும் சாதனைப் பெண்மணி பெற்றோர்களின் வெறுப்பு:அம்மா, அப்பா கைகள் இல்லாமல் பிறந்த குழந்தை என வெறுத்தார்கள். அத்தருணம் பாட்டி வீரம்மாளும், தாத்தா ராமர் இருவரும் வளர்க்கத் தொடங்கினார்.
சிறுவயதிலேயே என்னை குளிப்பாட்டவும், உடை மாற்றவும், பெரும் உதவியாக இருந்த பாட்டி பள்ளிக்கூடம் அழைத்துச் செல்லுவது, பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து வருவது என அனைத்து வேலைகளையும் எனக்காகவே செய்தார் என்றார் வித்யாஸ்ரீ.
தன் வாழ்நாளில் தனக்காக ஒரு வேலை இருக்கிறது என்று சொன்னால் அது என்னை வளர்க்கும் வேலை தான் என்று என்னை வளர்த்து வந்தவர் பாட்டி வீரம்மாள். இதுவரை உயிரோடு இருப்பதும், நம்பிக்கையோடு வாழ்வதற்கும் முக்கியக் காரணம் பாட்டி வீரம்மாளும், தாத்தா ராமரும் தான்.
என் மீது எனக்கு இருந்த நம்பிக்கையை விட என் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கை தான், படிக்க வேண்டும் என்ற உணர்வு வந்ததாகவும் கூறினார்.
பள்ளி வாழ்க்கை:ஒன்றாம் முதல் எட்டாம் வகுப்பு வரை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பூர் அரசுப் பள்ளியில் படித்தேன். என்னுடைய சொந்த ஊரான ஆற்காடு அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தேன்.
பத்தாம் வகுப்பில் 500-க்கு 329 மதிப்பெண் தான் எடுத்தேன். 12ஆம் வகுப்பு திருக்கோவிலூர் அருகே உள்ள கீழையூரில் டேனிஷ் மிஷின் பள்ளியில் படித்து 1200 மதிப்பெண்ணுக்கு 744 மதிப்பெண் எடுத்தேன்.
ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் வரை கைகள் பற்றிய கவலை வந்தது இல்லை. கல்லூரிக்கு செல்லும் போது தான் கைகள் இல்லாதது மிகப்பெரிய கவலையாக இருந்தது. என்னோடு படித்த மாணவர்கள் எனக்கு பேருதவியாக இருந்தார்கள். சக மாணவர்களில் ஒருவர் கூட தன்னை ஏளனமாக பார்த்தது இல்லை.
பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளை தன்னுடைய இரு கால்களை கொண்டுதான் எழுதினேன். கல்லூரி செல்வதாக இருந்தாலும் வெளியூர் செல்வதாக இருந்தாலும், தனியாகவே பேருந்தில் செல்வேன். திருக்கோவிலூரில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் பி ஏ படித்த பொழுது அந்த கல்லூரி நிர்வாகமே என் நிலையைக் கண்டு எனக்கு கட்டணம் எதுவும் வாங்காமலே படிக்க வைத்தார்கள். அதன் பிறகு, எம்.எ படித்தேன். பின்னர், பிஎட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இப்போது ஆசிரியர் தகுதி தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறேன்.
இரண்டு கால்களையே கைகளாக மாற்றி வாழும் சாதனைப் பெண்மணி மாவட்ட ஆட்சியரின் உதவி:ஒரு திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு சென்ற நான் ஆட்சியரிடம் ஒரு மனு அளித்தேன். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வேலை கிடைப்பதற்கு முன் ஏதாவது ஒரு வேலை வேண்டும் என்ற என் மனுவை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் கருணையோடு படித்து எனக்கு "வாழ்ந்து காட்டுவோம்" திட்டத்தில் "தொழிற்சார் சமூக வல்லுனர்" கணிணி சார்ந்த பணியை வழங்கினார்.
நான் சம்பாதித்து என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய ஒரே இலக்கு. இப்போது கிடைக்கிற சிறிய வருமானம் என் குடும்பச் செலவுக்காகவே பயன்படுத்தி வருகிறேன். எனக்கென்று எந்த செலவும் பெரிதாக கிடையாது.”
வாழ்கையில் யாருக்காவது உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும். குடும்பத்திற்குத் தேவையான அளவு வருமானத்தை ஈட்டிக் கொடுக்க வேண்டும். என் லட்சியம் ஆசிரியராவது தான் தொடர்ந்து அதற்காக படித்து வருகிறேன்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை ஒருநாள் சந்தித்தேன். எனக்காக பிரத்யேகமாக எந்த கருவியும் அங்கே இல்லை.. வண்டி ஓட்ட முடியாது. கைகள் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாத உபகரணங்களே அங்கு இருந்தது. அவர் எனக்கு பெற்று தருவதில் ஆர்வமாக இருந்தாலும் கூட உபயோகப்படும்படியான எந்த உபகரணமும் அங்கே இல்லை.
நானும் பெருந்தன்மையோடு அவரிடம் நன்றி கூறிவிட்டு வெளியேறியதாகவும். இருந்தாலும் நான் சந்தித்தித்த நல்ல மனிதர்களில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரும் ஒருவர் என்று பெருமிதம் கொண்டார்.
இரண்டு கால்களையே கைகளாக மாற்றி வாழும் சாதனைப் பெண்மணி கவிஞர் வாலியின் வரிகள்: ‘நாளை என்றும், நம் கையில் இல்லை, நாம் யாரும் தேவன், கை பொம்மைகளே, என்றால் கூட போராடு, நண்பா என்றைக்கும், தோற்காது உண்மைகளே’என்கிற வாலியின் பாடல் வரிகளை மனதில் கொண்டு என்னைப் போன்ற பிறவி கோளாறுகளால் துவண்ட மாணவச் செல்வங்களை ஊக்கப்படுத்தும் வகையில் நல்ல கருத்துக்களை சொல்லி வருகிறேன்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்கிற அந்த ஒரு உணர்ச்சி இன்றளவும் எனக்குள் ஊறிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக ஒரு நாள் நிச்சயம் சிறந்த ஆசிரியராக சாதிப்பேன் என்று வெற்றி நடை போடுகிறார் வித்யாஸ்ரீ...
இதையும் படிங்க:தாய்ப்பால் தானம்: சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கோவையைச் சேர்ந்த பெண்!