விழுப்புரம்: தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று தென்பெண்ணை ஆறு. கர்நாடக மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) என்கிற பகுதியில் உற்பத்தி ஆகி 430 கி.மீ. தூரம் பயணம் செய்கிறது
தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கி.மீ பயணத்தையும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 180 கி.மீ, திருவண்ணாமலை மாவட்டத்தில் 34 கி.மீ, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கி. மீ பயணம் செய்து, இறுதியில் கடலூர் தாழங்குடா அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ ஆகும். மார்கண்ட நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு ஆகியவை இதன் முக்கிய துணை ஆறுகளாகும். விழுப்புரம் மாவட்டத்தில் செல்லும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே பழமை வாய்ந்த எல்லீஸ் சத்திரம் மற்றும் சொர்ணாவூர் ஆகிய இரண்டு முக்கிய அணைக்கட்டுகள் உள்ளன.
பழுதடைந்த அணைகள்: கடந்த 2021ஆம் ஆண்டில் ரூ.26 கோடி செலவில் கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை திறக்கப்பட்ட சில மாதங்களில் இடிந்து விழுந்தது. இதேபோல் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டும் பெரிய அளவில் சேதமடைந்தது.
முக்கிய நீர்பிடிப்பு பகுதியான எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் மூலம் தேக்கி வைக்கப்படும் தண்ணீரால், விழுப்புரம் நகரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்வதோடு, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாய பாசனத்திற்கும் நீர் பயன்பட்டு வந்தது. இதேபோல் சொர்ணாவூர் அணைக்கட்டின் மூலம் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் விவசாய பாசனத்திற்கு பேருதவியாக அமைந்திருந்தது.
வீணாகும் தண்ணீர்: இத்தகைய முக்கிய தடுப்பணைகளின் சேதத்தால் தென்பெண்ணையாற்றில் செல்லும் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை நிலவி வருகிறது. தற்போது மழை காலத்தில், தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்துச் செல்லும் தண்ணீர், கடலூர் சென்று வங்கக் கடலுக்கு சென்று விடுகிறது.
கடந்த ஓராண்டில் மட்டுமே, தென்பெண்ணையாற்றில் 130 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலுக்குள் சென்றுள்ளதாக தென்பெண்ணையாற்றை கண்காணித்து வரும் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார பிரிவு அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.