சென்னை அண்ணாப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளான ஆரணி, காஞ்சிபுரம், பண்ருட்டி, திண்டிவனம் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 கல்லூரிகளில் 2017-2021 ஆம் ஆண்டு பட்டம் முடித்த 1,114 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
அண்ணாப் பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தலைமை தாங்கினார். உயர் கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன், ஆட்சியர் மோகன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி, தேசிய கல்விக் கொள்கையில் சிலவற்றை சுட்டிக்காட்டி அதனை திருத்தி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு அரசின் சார்பாக வைக்கப்பட்டது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய அரசிடம் இருந்து ஏதோ கடமைக்கு திருத்தம் செய்யப்பட்டது போன்ற ஒரு நகல் அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்வினை நீக்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் நீதிமன்ற உதவியுடன் விரைவில் நீக்கப்படும்.
மேலும் இந்த ஆண்டு முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான பாடப்பிரிவில் தமிழ் பாடப்பிரிவு சேர்க்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படும். அதேபோல் பொறியியல் கல்லூரிகளிலும் முதல் மற்றும் இரண்டாம் செமஸ்டர்களில் முறையே தமிழ் பாடமானது இணைந்து நடத்தப்படும்.