விழுப்புரம்: காணை ஊராட்சி ஒன்றியம் கஞ்சனூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பின்னர் செய்தியாளர்களைச் சந்த்திதார். அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி 'தமிழகம்' என்பதே சிறந்த வார்த்தை 'தமிழ்நாடு' என்கிற வார்த்தை பிரிவினை வாதத்தை தூண்டும் என்று கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,
"தமிழ்நாடு என்பது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு நல்ல பெயர். அது ஒன்றும் புதிதாக தோன்றவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் பொழுது நடந்த விவாதத்தில், ஒற்றையாட்சி முறை மற்றும் கூட்டாட்சி முறை ஆகிய இரண்டு கருத்துகள் முன்மொழியப்பட்டன. அப்போது அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பொதுவான முறையில் 'யூனியன் ஆப் ஸ்டேட்ஸ்(Union of States)' என்று கொண்டு வந்தார்.
யூனியன் என்றால் ஒருங்கிணைந்த அல்லது ஒன்றியம் என்று பொருள். ஸ்டேட்ஸ், என்றால் மாநிலம் என்று பொருள். இதன் அடிப்படையிலே தமிழ்நாடு என்ற பெயர் உருவாக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பின்படி செயல்படுகின்ற நமது தமிழ்நாடு முதலமைச்சருக்கு இதில் எந்த ஒரு வேறுபட்ட கருத்தும் இல்லை.