விழுப்புரம் மாவட்டம் காவல் படை மைதானத்தில் செயற்கை உபகரணங்கள் உற்பத்திக் கழகம் (ALIMCO) சார்பாக, மத்திய அரசின் ADIP திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
"மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி"- பொன்முடி பெருமிதம்!
விழுப்புரம்: மத்திய அரசின் ADIP திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில், பல்வேறு வகையான குறைபாடுகள் உள்ள 2,414 மாற்றுத்திறனாளிகளுக்கு பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் கேன், ஸ்மார்ட் தொலைபேசி, மூன்று சக்கர வாகனங்கள், மடக்கு சக்கர நாற்காலிகள், டிஜிட்டல் காது கருவி உள்ளிட்ட 4 ஆயிரத்து 87 உதவி சாதனங்கள் வழங்கப்பட்டன. இவற்றின், மதிப்பு சுமார் ரூ. 1.75 கோடி இருக்கும் எனக் கணக்கிட்டுள்ளனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, "மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய சலுகைகளை வழங்க மத்திய - மாநில அரசுகள் முயன்று கொண்டிருக்கிறது. ஆனால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஊனமுற்றவர்கள் என்கிற பெயரை மாற்றி, அவர்களை மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வைத்தார். மேலும், அவர்களுக்காக தனித்துறையை உருவாக்கி அரசு வேலைவாய்ப்பில், தனி இட ஒதுக்கீடு வழங்கி அழகு பார்த்தார்" எனப் பெருமிதம் கொண்டார்.
இதையும் படிங்க: அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு