தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனநலம் பாதித்த பெண்களுக்கு பாலியல் தொல்லை; தனியார் ஆசிரமத்தில் இருந்தவர்கள் மீட்பு - தனியார் ஆசிரமத்தில் இருந்தவர்கள் மீட்பு

விழுப்புரம் அருகே தனியார் ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து ஆசிரமத்தில் மற்றொரு கிளையில் இருந்த நபர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 15, 2023, 7:56 PM IST

விழுப்புரம்அருகே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த தனியார் ஆசிரமத்தில் 150க்கும் மேற்பட்ட மனநலம் குன்றியவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சலிம்கான் என்பவர் தனியார் ஆசிரமத்தில் இருந்து மாயமான தன்னுடைய மாமா ஜாஹிருல்லாவை கண்டுபிடித்து தரும்படி ஆட்கொணர்வு மனு தொடர்ந்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கடந்த 10-ம் தேதி தனியார் ஆசிரமத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல மர்மமான தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்தன.

இந்த ஆசிரமத்தில் தங்கி இருந்த 16 நபர்கள் காணவில்லை என்றும்; அவர்களைப் பற்றிய தகவல் இன்றளவும் தெரியவில்லை எனவும்; ஆதரவற்றோர் மனநலம் குன்றியவர்கள், ஊழியர்கள் என அனைவரும் சுகாதாரமற்ற முறையில் இங்கே தங்கி வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக சமூக ஆர்வலர் ராஜம்மாள் இந்த ஆசிரமத்தில் பல முறைகேடுகள் மற்றும் பாலியல் தொல்லைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். ஆசிரமம் பற்றிய செய்தி தமிழகம் முழுவதும் பரவத் தொடங்கியதும் அதன் தீவிரத்தை உணர்ந்த மாவட்ட ஆட்சியர் ஆசிரமத்திற்கு நேரில் சென்று, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த அனைவரையும் மீட்டு, உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர்களுக்கு உரிய மனநிலை சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் உடலில் மிகப்பெரிய அளவிலான காயங்கள் இருப்பதும், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போதை மருந்துகளை கொடுத்து, அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் போலீசாரின் தீவிர விசாரணையில் வெளிவந்தது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றோரை பயமுறுத்தும் வகையில் இரண்டு குரங்குகளை ஆசிரம நிர்வாகி ஜுபின் பேபி அவர்கள் வளர்த்து வந்ததும், குரங்குகளை வைத்து அவர்களை மிரட்ட, கடிக்க வைத்ததும் இதனால் பலரின் உடம்புகளில் குரங்குகள் கடித்ததற்கான பல் தடயங்கள் இருப்பதும் மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இது தொடர்பாக ஆசிரம நிர்வாகிள் மற்றும் அதன் ஊழியர்கள் ஆறு பேர் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் நான்கு பேரை நேற்றைய தினம் கைது செய்தனர். ஆசிரம நிர்வாகியான ஜுபின் பேபியும் குரங்கு கடித்ததாக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அவருடைய மனைவியான மரியா ஜூபின்
தனக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் இருந்துள்ளார்.

மேலும் இன்று மரியா ஜீபின் பூரண நலம் பெற்று விட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததன் காரணமாக, அவரை மருத்துவமனை வளாகத்திலேயே வைத்து காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் ஆசிரமம் பற்றி வெளிவந்தபடி உள்ளன. இவ்வழக்கில் தனியார் ஆசிரமம் நிர்வாகிக்கு உடந்தையாக செயல்படுகிறதா அரசு நிர்வாகம் என்ற குற்றச்சாட்டையும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.

ஆசிரம நிர்வாகியான ஜீபின் மருத்துவமனையில் இருந்து கொண்டே முன்ஜாமின் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உடந்தையாக இருப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளிவருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சித்ரவதை செய்ததோடு பாலியல் வன்கொடுமை செய்த மனசாட்சியே இல்லாத குற்றவாளிக்கு இந்த அரசு துணை போகிறதா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்நிலையில் இன்று மாலை ஆசிரமத்தின் மற்றொரு கிளையில் இருந்து 13 பெண்கள் உட்பட 25 நபர்கள் மீட்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மனநல மருத்துவமனைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மனநலம் பாதித்த பெண்களுக்கு பாலியல் கொடுமை - 4 பேர் கைது.. 2 பேருக்கு வலைவீச்சு

ABOUT THE AUTHOR

...view details