கள்ளக்குறிச்சி மாவட்டம் கூகையூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் அதிமுகவின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆவார். இவரது இருசக்கர வாகனம் நவம்பர் 5ஆம் தேதி காணாமல் போனது. இதனையடுத்து அவர் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் சபரிமலையிடம் தனது வாகனம் காணவில்லை என புகார் மனு அளித்துள்ளார்.
இந்தப் புகாரை வாங்கிக் கொண்டு உதவி ஆய்வாளர் சபரிமலை வழக்குப்பதிவு செய்யாமல் இருந்தார் எனக்கூறப்படுகிறது. இதனிடையே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெரியசாமி காவல் நிலையத்திற்குச் சென்று உதவி ஆய்வாளர் சபரிமலையிடம் ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என கேள்வி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் பெரியசாமியை அடித்து உதைத்ததோடு காவல் நிலையத்தில் வைத்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த பெரியசாமியின் உறவினர்கள் அவரை காவல் நிலையத்திலிருந்து மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரியசாமியின் உறவினர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் அளித்து பெரியசாமியை தாக்கிய காவல்துறை உதவி ஆய்வாளர் சபரிமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
இச்சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெரியசாமியை கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பிரபு, அரசு மருத்துவமனையில் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு பின்னர் பொய் வழக்கு பதிவு செய்த கீழ்குப்பம்உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரனிடம் புகார் மனுவை அளித்தார்.