விழுப்புரம்: ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நடிகர் சூர்யா மீது குற்றம்சாட்டி நடிகர் சூர்யா பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ''ஜெய்பீம்' படத்தில் வன்னியர்களை கொச்சைப்படுத்திய நடிகர் சூர்யா மன்னிப்புகோராத வரை கடலூர் மாவட்டத்தில் 'எதற்கும் துணிந்தவன்' படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது' என பாமக மாணவர் சங்க மாநிலச்செயலாளர் விஜயவர்மன் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினருக்கு கடிதம் அனுப்பினார்.
இதனையடுத்து, நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை வெளியிட எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் திரையரங்கத்திற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர். சென்னை தியாகராய நகர், ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாகப் போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை காவல் துறை முடிவு செய்துள்ளது.
மனு கொடுத்து எதிர்ப்பு தெரிவித்த பாமக இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இன்று வெளியான நிலையில் திரையரங்கம் முன் பேனர் மற்றும் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தன. இதனைக் கண்ட பாமகவினர் திரைப்படத்தை வெளியிட எதிர்ப்புத் தெரிவித்து திரையரங்கு உரிமையாளரிடம் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என மனு கொடுத்தனர்.
மேலும், விழுப்புரம் செஞ்சி தனியார் தியேட்டரில் வெளியிடப்படும் நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என பாமக செஞ்சி நகரச் செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் திரையரங்க நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதனையடுத்து, 15-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் திரையரங்கு வளாகத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் கல்யாண் திரையரங்கில் இன்று எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை 175 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு அமைதியான முறையில் படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க:எதற்கும் துணிந்தவர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!