தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளச் சாராய பலி எண்ணிக்கை அதிகரிப்பு: பாமக ஜி.கே.மணி வேதனை! - பாமக ஜிகே மணி

விழுப்புரத்தில் கள்ளச் சாராயத்திற்கு சுமார் 22 பேர் பலியான சம்பவம் வேதனை அளிக்கிறது என்று பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

fake liquor
கள்ளச் சாராயம்

By

Published : May 17, 2023, 1:31 PM IST

சேலம்: செவ்வாய்பேட்டை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

மேலும், சேலம் மேற்கு தொகுதி பாமக எம்.எல்.ஏ இரா.அருள் வரவேற்பாளராக இருந்தார், மாநகர மாவட்ட தலைவர் கதிர் ராஜரத்தினம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், கட்சி வளர்ச்சி பணி குறித்தும், இட ஒதுக்கீடு குறித்தும், மக்களவைத் தேர்தலில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதைத் தொடர்ந்து பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியது, “தமிழ்நாட்டில் போதை பொருளான கஞ்சா உள்ளிட்ட அனைத்தும் தடையில்லாமல் கிடைக்கிறது. இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச் சாராய விற்பனை தமிழ்நாட்டில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கள்ளச் சாராயம் விவகாரத்தில் 22 பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதற்கு தனிப்பிரிவு உருவாக்கி கள்ளச் சாராயம் போன்ற போதை பொருட்கள் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்றும், சேலம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மக்கள் தொகை அதிக அளவில் உள்ளது. எனவே மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டத்தைப் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான பனமரத்துப்பட்டி ஏரியில் உபரி நீரை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் நீர் தங்கு தடையில்லாமல் கிடைக்கும். சேலம் உருக்காலைக்கு 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக வேலை வழங்காமல் உள்ளனர். வேலை வழங்கவில்லை என்றால் விவசாயிகளிடமே நிலத்தை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சட்டம் ஒழுங்கை சீர் செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என ஜி.கே.மணி தெரிவித்தார். இந்த பேட்டியின் போது மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் சதாசிவம், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சி.ஆறுமுகம், மாநில துணைத் தலைவர் சக்ரவர்த்தி, சட்ட பாதுகாப்பு குழு தலைவர் வழக்குரைஞர் குமார், இளைஞரணி செயலாளர் விஜயகுமார், இளம்பெண்கள் அணி செயலாளர் தங்கம், தலைவர் கிருஷ்ணாம்பாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விஷ சாராய விவகாரத்தில் முக்கியக் குற்றவாளி கைது... அடுத்தடுத்து வெளிவரும் திருப்பங்கள்!

ABOUT THE AUTHOR

...view details