விழுப்புரம் மாவட்டம் நன்னாடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சாலையோரம் அமைந்துள்ள இக்கடையில் குடிமகன்கள், குடித்துவிட்டு வழிப்பறி, பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள், விவசாய நிலங்களில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மேலும் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இதனால் நன்னாடு, அதனருகில் உள்ள வி.புதுப்பாளையம் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பிரச்னைக்குரிய இக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்டப் பல போராட்டங்களில் ஈடுபட்டும், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கூறுகையில், "நன்னாடு பகுதியிலுள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்றினால்தான் எங்களால் நிம்மதியாக வாழமுடியும். எங்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வேண்டும்.
நன்னாடு பகுதிமக்கள் மனுவுடன் நாங்கள் அமைதியாக வாழ வழி செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். மேலும் அவர், "இல்லையென்றால் எங்களது எதிர்ப்பை தெரிவிக்க நாங்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை தேவை' - பாமக நிறுவனர் ராமதாசு!