தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத் திறனாளிகளைக் கண்டுகொள்ளாத மாவட்ட ஆட்சியர் - meeting

விழுப்புரம்: கடந்த எட்டு மாதங்களாக நடத்தப்படாத மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தை, உடனடியாக நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான  சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்கம்

By

Published : Jun 6, 2019, 3:20 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் நிர்வாகிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியனுக்கு அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, ’தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்ப்பதற்காக, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும், கோட்டாட்சியர்கள் மாதத்துக்கு ஒரு முறையும் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடத்தி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, 2017ஆம் ஆண்டு டிசம்பரில், மாநில வருவாய்த் துறை ஆணையர் உத்தரவிட்டார். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த எட்டு மாதங்களாக, மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடத்தவில்லை.

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், உடனடியாக மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, கோட்டாட்சியர்களையும் அந்தந்த பகுதியில், குறைதீர் கூட்டங்களை நடத்த அறிவுறுத்த வேண்டும்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு நான்கு மணி நேர வேலையும், ரூ.224 முழு தினக்கூலியும் தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டும்.

மாதாந்திர உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளை, தரகர்கள் மூலம் லஞ்சம் கேட்டு அலுவலர்கள் அலைக்கழிக்கின்றனர்.

இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு அத்துறையின் மூலம் வழங்கப்படும் உதவித் தொகை, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஸ்கூட்டர், பேட்டரி சைக்கிள், உதவிக் கருவிகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details