மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சிபிஎம் பரப்புரை செய்கிறது.
விக்கிரவாண்டி தொகுதியில் கெடார், காணை ஆகிய பகுதிகளில் தெருமுனை பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசவுள்ளேன். நாளை (அக்டோபர் 7, 2019) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார். தமிழ்நாட்டு மக்கள் மத்திய - மாநில அரசுகளின் இருபக்க தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்”. மேலும், மத்திய அரசு இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்தும் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. அதனால் மத்திய அரசு எதிர்ப்பு மாநில அரசிடம் இல்லை. ஒரே மொழி கொள்கை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத்கீதை என எதையும் எதிர்க்காமல் மத்திய அரசின் எடுபிடியாகவே மாநில அரசு செயல்படுகிறது.