இசையமைப்பாளர் இமானைக் கவர்ந்த விழுப்புரம் மாணவி விழுப்புரம்: திண்டிவனம் நகராட்சி அடுத்த அம்மனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவரான ராஜ்குமார், பம்பை உடுப்பை இசைக்கலைஞர் மற்றும் குரல் வளம் மிக்கவர். இவரது மகள் தர்ஷினி, செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாணவி தர்ஷினி, கார்த்தி என்ற இளைஞர் வீட்டின் முன்பு நாட்டுப்புறப் பாடல் ஒன்றை பாடியுள்ளார். இதனை வீடியோவாக பதிவேற்றம் செய்த கார்த்தி, அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இப்பாடலானது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இத்தகைய சூழ்நிலையில் தொடர்ந்து இளம் பாடகர்களை ஊக்குவிக்கும் வகையில், சமூக வலைத்தள பதிவுகளை தினசரி உற்றுநோக்கி வரும் இசையமைப்பாளர் டி.இமான், இப்பதிவினை கண்டுள்ளார். இதனை அடுத்து, தர்ஷினியின் தந்தையை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இமான் பேசியுள்ளார்.
அப்போது, "உங்கள் மகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. எனவே உங்களுடைய மகளுக்கு நான் இசையமைக்கும் ஒரு திரைப்படப் பாடலில் பாட வாய்ப்பு தருகிறேன். இந்த செய்தியை உங்கள் மகள் தர்ஷினியிடம் கூறுங்கள்" என தொலைபேசி வாயிலாகக் கூறி உற்சாகப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தர்ஷினியிடம் கேட்டபோது, "நான் செங்கல்பட்டு மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறேன். ஒருநாள் எனது கிராமப்புறத்தில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் ஏரி வேலை செய்பவர்கள், என்னைப் பாடச் சொன்னதைத் தொடர்ந்து, நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடினேன்.
இதனை எங்கள் வீட்டில் அருகில் வசிக்கும் கார்த்தி அண்ணன் வீடியோவாக பதிவேற்றம் செய்து, இணையத்தில் வெளியிட்டார். அதனைப் பார்த்த இசையமைப்பாளர் இமான், என் தந்தையைத் தொடர்பு கொண்டு, தான் இசையமைக்கும் திரைப்படப் பாடலில் என்னைப் பாட வைக்கிறேன் என்று கூறியுள்ளார். இது மிகவும் சந்தோஷமாக உள்ளது" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க:“விரைவில் படம் வெளியாகும்”- துருவ நட்சத்திரம் வெளியீடு குறித்து கெளதம் வாசுதேவ் மேனன் உருக்கம்!