விழுப்புரம்:நாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் குறைந்த படுக்கைகளைக் கொண்டிருந்தாலும், அங்கு நோயாளிகளைப் பராமரிக்க அதிகப்படியான செவிலியர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், பல்வேறு மக்கள் உபயோகித்துவரும் ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியரின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது.
இவற்றைக் கருத்தில்கொண்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அதிக அளவிலான செவிலியரைப் பணியமர்த்த வேண்டும் என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனை இந்தியாவின் ஐந்து தென் மாநிலங்களின் மக்களுக்குப் பயன்பட்டுவருகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் இரண்டாயிரத்து 137 படுக்கைகள் உள்ளன. பெரும்பாலும் அவை நிரம்பி உள்ளன.
ஆனால், இங்கே போதுமான அளவு செவிலியர் இல்லை. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாயிரத்து 362 படுக்கைகளும், பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்க நான்காயிரத்து 759 செவிலியரும் பணியில் உள்ளனர்.
விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் கடிதம் 960 படுக்கைகள் மட்டுமே உள்ள ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையில், ஆயிரத்து 327 செவிலியர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், இரண்டாயிரத்து 137 படுக்கைகள் கொண்ட ஜிப்மர் மருத்துவமனையில் 745 செவிலியர் மட்டுமே பணியில் உள்ளனர். அதுபோலவே மூத்த செவிலி அலுவலர் (சீனியர் நர்ஸிங் ஆபீசர்) எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.
இதனால் அவர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கிறது. அதன் காரணமாக நோயாளிகளுக்குப் போதுமான அளவு சிகிச்சை வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே உடனடியாகப் போதுமான எண்ணிக்கையில் ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியரைப் பணியமர்த்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.