உலகப்புகழ் பெற்ற கூத்தாண்டவர் கோயில் விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருநங்கைகளுக்கான சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 2ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் திருநங்கைகளுக்கான 'மிஸ் கூவாகம் 2019' நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மிஸ் கூவாகம் பட்டம் வென்ற நபீஸா காலையில் நடைபெற்ற முதல் சுற்றில் 35 திருநங்கைகள் கலந்து கொண்டனர். இதில் ஆடை அடிப்படையில் முதல் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டிக்கான நிகழ்ச்சியில் பல்வேறு கேள்விகளுக்கான அடிப்படையில் முதல் மூன்று அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தர்மபுரியைச் சேர்ந்த நபீஸா முதலிடத்தையும், கோவையைச் சேர்ந்த மடோனா இரண்டாம் இடத்தையும், பவானியைச் சேர்ந்த ருத்ரா மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர்.
இவர்களுக்கு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் ஆர்.கே சுரேஷ், ஜெய் ஆகாஷ், ஆரி ஆகியோர் 'மிஸ் கூவாகம் 2019' பட்டத்தை அளித்தனர்.